Epistaxis Explained in Tamil by Kiran Mayi A

காது மூக்கு தொண்டை மருத்துவத்தின் கீழ் வரும் ‘மூக்கில் ரத்தம் வடிதல்’ – Epistaxis/ சில்லு மூக்கு பற்றிய பாடம் இது. VIDEO எனும் காணொளி மூலமாக சென்னை மருத்துவக் கல்லூரி மாணவி செல்வி கிரண் மயீ விளக்கம் அளிக்கிறார்.
பாடத்தினுள் நுழைவதற்கு முன் இந்த பாடத்தை ஒரு முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர் எதிர்கொண்டால் அவருக்கு என்ன தோன்றும்? மூக்கில் இரத்தம் வழியும் நிலையில் பதற்றத்துடன் ஓடி மருத்துவமனைக்குள் வரும் பெற்றோரை எதிகொள்ளும் நிலையில் எப்படி அணுகுவது ? என்று தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
Epistaxis அல்லது சில்லு மூக்கு என்று அழைக்கப்படும் இது மூக்கில் இருந்து ரத்தம் வடிதலை குறிக்கிறது. இந்த தலைப்பின் கீழ் நாம் காணவுள்ளது மூக்கின் வாஸ்குலார் உடற்கூறியல், Epistaxis-இன் வகைப்பாடு, காரணங்கள், சிகிச்சை வழிமுறைகள் மற்றும் புதிய முன்னேற்றங்கள் (0:50), வாஸ்குலார் உடற்கூறியல் பற்றி இனி காண்போம்.
மூக்கிலிருந்து இரத்தம் வடிதலானது – மூக்கின் இடைச் சுவரில் இருந்து வரலாம், அல்லது பக்கவாட்டு சுவரில் இருந்து வரலாம், அல்லது நாசித் தொண்டையில் இருந்து வரலாம். ஆனால் பெரும்பாலான சமயங்களில் மூக்கின் இடைச் சுவரில் இருந்து இரத்தம் வருவதாக உள்ளது.

இதன் தமனிகள் – ஆன்டீரியர் மற்றும் போஸ்டீரியர் எத்மாய்டல் தமனி (Anterior,posterior ethmoidal artery), ஸ்பீனோபலடைன் தமனி(sphenopalatine artery), கிரேட்டர் பலடைன் தமனி(greater palatine artery), சுபீரியர் லேபியல் தமனி.(superior labial artery) என்றழைக்கப்படும் (1:03).
இதில் posterior ethmoid artery தவிர மற்ற தமனிகள் அனைத்தும் இணைந்து – கிசல்பேக் ப்லெக்சஸ் (Kiesselbach plexus) என்பதை உருவாக்குகின்றது. இது மூக்கின் இடைச்சவரில் சற்றே முன் பக்கமும் சற்றே கீழேயும் உள்ளது. இதுவே முன்னணி epistaxis – இன் பொதுவான காரணமாகும். இந்த இடத்தை லிட்டில் (Little) area என்று அழைக்கிறோம். ஜேம்ஸ் லிட்டில், கிசல்பேக் – இவர்கள் இருவரும் மருத்துவர்கள். இந்த இடத்திற்கு இவர்களே முதலில் விளக்கம் அளித்தனர் (1:44). இவ்வளவு தமனிகள் இருந்தும் இதற்குமேல் மெல்லிய சளிப் படலம் மட்டுமே உள்ளது. அதனால் தான் இவைகள் சுலபமாக முறிந்து விடுகின்றன (2:10).
ரத்தம் வடிதலுக்கான மற்ற சில முக்கியமான இடங்கள் – ரெட்ரோகாலுமெல்லார் வெயின் (Retrocolumellar vein) இது காலுமெல்லாவிற்கு இரண்டு மில்லி மீட்டர் பின்பக்கம் உள்ளது. குழந்தைகளில் காணப்படும் வீனஸ் எபிஸ்டேக்ஸ் பொதுவான மூல ரத்தக் குழாய் ஆகும். அடுத்ததாக வுட்ரஃப் (Woodruff) plexus, இது இன்பீரியர் டர்பினேட்டுக்கு பின்புற இறுதியின் கீழ்ப்பக்கம் அமைந்துள்ளது (02:23).
இதன் வகைப்பாடு, குழந்தைப் பருவத்தில் பார்க்கலாம் இல்லையெனில் பெரியோர்களிலும் பார்க்கலாம். முன்புறம் அல்லது பின்புறம் – எதை வைத்து முன்புறம் அல்லது பின்புறம் என்று கூறுகிறோம்? பைரிஃபார்ம் அபர்ச்சருக்கு முன்புறம் இருந்தால் முன்புற எபிஸ்டாக்சிஸ் என்றும், பின்புறம் இருந்தால் பின்பக்க எபிஸ்டாக்சிஸ் என்று அழைக்கிறோம். பின்பக்கமாக இருந்தால் எங்கிருந்து ரத்தப்போக்கு ஏற்படுகிறது என்று கண்டுபிடிப்பது சற்றே கடினம்.

அதுமட்டுமில்லாமல் பின்புறம் இருந்தால் அது சில நேரங்களில் முழுங்கப்பட்டு ரத்தம் கலந்த வாந்தியாக வரும்பொழுது ஹெமட்டெமிஸிஸ் (Hematemesis) என்று தவறாக கணக்கிடலாம் (02:55). இது மட்டும் இல்லாமல் இதை பிரைமரி, செகண்டரி என்றும் வகைப்படுத்தலாம். எந்த ஒரு காரணமும் இல்லாமல் தணிச்சையாக வந்தால் அது பிரைமரி. ஏதோ ஒரு காரணத்தினால் வந்தால் அது செகண்டரி.
மூக்கிலிருந்து இரத்தம் வெளிவரக் காரணங்கள் பல உள்ளது. இதை லோக்கல் காரணம் அல்லது சிஸ்டமிக் காரணம் என்று பிரிக்கலாம். லோக்கல் அல்லது மூக்குக்குள் காரணங்கள். மூக்கை அகழ்தலால் வரலாம். குறிப்பாக குழந்தைகள் மூக்கை நோண்டும் பொழுது லிட்டில் ஏரியாவில் இருந்து ரத்தப்போக்கு வரலாம். மூக்கை பலமாக ஊதுதல், மூக்கு வறட்சி அடையும் பொழுது – அதாவது மருந்து பயன்பாட்டினால் அல்லது வளிமண்டல மாற்றங்களின் போது- குளிர்காலம், வறட்சியான காலம் குளிர்சாதனம் பயன்படுத்தும் போது மூக்கு வறட்சி அடைவதால் எபிஸ்டாக்ஸிஸ் வரலாம். நோய் தொற்றுகளின் போதும், அறுவை சிகிச்சைக்கு பின்னும் இரத்தப்போக்கு வரலாம் (03:34).

   உடல் சம்பந்தப்பட்ட காரணங்கள். ரத்தம் உறைதல் குறைபாடு இருக்கும் பொழுது, உதாரணமாக ஹீமோஃபிலியாவில் எபிஸ்டேக்ஸிஸ் வரலாம். ஆல்கஹால் பயன்பாட்டினால் கல்லீரல் பாதிப்படைந்து கிளாட்டிங் ஃபேக்டர்ஸ் (clotting factors) இன் உற்பத்தி குறையும் பொழுது எபிஸ்டேக்ஸிஸ் வரலாம். வார்ஃபரின், ஆஸ்பிரின் (warfarin, aspirin) பயன்பாட்டினால் வரலாம். உயர் ரத்த அழுத்தம் இருக்கும் பொழுது இரத்தப் போக்கை கட்டுப்படுத்துதல் சற்றே கடினம் (04:21)      

ஒரு 16 வயது சிறுவன் அடிக்கடி மூக்கில் ரத்தம் வடிதல் என்று கூறுகிறான். ஒரு பக்க வடிதல் என்றும் அதிகமான ரத்தப்போக்கு இருப்பதாகவும் கூறுகிறான். அவனுக்கு மூக்கு அடைப்பு இருப்பதாகவும் கூறுகிறான். ரத்தம் உறைதல் குறைபாடோ அல்லது அடிபட்டதற்கான எந்த வரலாறும் இல்லை. காயமும் ஏற்படவில்லை. இப்படி இருக்கும் பொழுது எதை சந்தேகிக்க வேண்டும்? Juvenile nasopharyngeal angiofibroma (04:50)

      40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் வருகிறார். telangiectasia அதாவது, ரத்த நாளங்கள் விரிவடைவதால் வரும் நிலை காணப்படுகிறது. அடிக்கடி மூக்கில் ரத்தம் வடிவதாகவும் கூறுகிறார். தனது தந்தைக்கும் இதே போன்ற ஒரு பாதிப்பு உள்ளது என்றும் கூறுகிறார். இது மரபணு சம்பந்தப்பட்ட ஒரு நோயாகும். இதை Osler Weber Rendu syndrome  அல்லது Hereditary Hemorrhagic Telangiectasia என்று கூறுகிறோம் (04:50). 

சிகிச்சை வழிமுறைகள் பற்றி இனிகாண்போம். இதற்கு முதலுதவி என்ன? இதை ஹிப்போகிரட்டிக் அல்லது டிராட்டர் மெத்தட் (Hippocratic / Trotter method) என்று கூறுவர். இதில் முதலில் முன்பக்கமாக சாய்ந்து உட்கார்ந்து, மூக்கின் முன் பகுதியை குறைந்தபட்சம் பத்திலிருந்து பதினைந்து நிமிடம் வரை அழுத்தி பிடிக்க வேண்டும். வாய் வழியாக சுவாசிக்க வேண்டும். பின்பக்கம் சாய்தல் கூடாது. இதனுடன் இணைந்து ஐஸ் பேக்ஸ் வைப்பதால், ரத்தம் வடிதல் குறைகிறது. இதனுடன் ஆரம்ப கட்ட மருத்துவ ஆய்வு செய்ய வேண்டும் (05:55).

முதற்கட்ட சிகிச்சை நேரடி சிகிச்சையாக இருக்க வேண்டும், அதாவது மூக்கை முதலில் ஆராய்ந்து, எங்கிருந்து ரத்தம் வடிகிறது என்று கண்டுபிடித்து விட்டால் அதை கட்டுப்படுத்த காட்டரி உபயோகப்படுத்தலாம். இவை சில்வர் நைட்ரேட், பைபோலார் டயாத்தர்மி அல்லது எலக்ட்ரோ காட்டரி என வகைப்படும் (06:53).
முதற்கட்டத்தின்போது நேரடியாக ரத்த நாளங்களை கண்டுபிடிக்க முடியவில்லையெனில் இரண்டாம் கட்டத்திற்கு செல்வோம், இதில் பேக்கிங் என்ற ஒன்றை செய்யலாம். அதாவது ஒரு மீட்டர் அளவிற்கு வலைத்துணியை எடுத்து, அதை லிக்விட் பாரஃபினில் நன்கு நனைத்து, மூக்கின் முன்புறத்தில் இருந்து பின்புறமாகவும் கீழிருந்து மேலாகவும் நெருக்கமாக அடைக்கலாம். இக்காலத்தில், புதிய வழிமுறையில் தடுப்புகள் வந்துவிட்டன.

இதில் கரையும் தடுப்புகள், மற்றும் கரையாத தடுப்புகள் உள்ளன. இப்படி செய்வதால் ரத்த போக்கு கட்டுக்குள் கொண்டுவரப்படும். இப்படி செய்தும் ரத்தம் வழிவது நிற்கவில்லை எனில், சற்றே உள்பக்கமாகவும் பேக்கிங் செய்யலாம்.

இதில் கத்தீட்டரை மூக்கு வழியாக நுழைத்து வாய் வழியாக கொண்டு வந்து அதன் முனையில் வலைதுணியை கட்டி அதை நாசித் தொண்டைக்கு எதிராக வைத்து கட்டலாம். இப்பொழுது இதை விட சுலபமாக ஃபோலீஸ் கத்தீட்டர் போன்றவற்றை உபயோகிக்கிறார்கள். அல்லது பலூன் தடுப்புகளும் உபயோகிக்கலாம்.
பேக்கிங் செய்யும் பொழுது ஆன்டிபயாட்டிக் மருந்துகள் கூடவே கொடுக்கப்படுகின்றன. இவை எப்போதும் ஈரப்பதமான நிலையில் வைத்திருக்கப்பட வேண்டும். இப்படி செய்தும் 24 மணி நேரத்திற்குள் ரத்தப்போக்கு நிற்கவில்லை என்றால், மூன்றாம் கட்டத்திற்கு சென்றாக வேண்டும் (07:20).
என்ன செய்தும் மூக்கிலிருந்து இரத்தம் வழிவது நிற்காத நிலையில், மூன்றாம் கட்டமாக அறுவை சிகிச்சை மூலம் தமனி பிணைத்தல் மேற்கொள்ளப்படுகிறது. இதில் நாம் ஒரு முன்னுரிமை வரிசையை பின்பற்ற வேண்டும். முதலில் sphenopalatine தமனியை பிணைக்க வேண்டும். ஏனெனில் இந்த தமனி தான் மூக்கின் ரத்த வளங்களில் முக்கியமான ஒன்று.

    அடுத்ததாக இதிலும் ரத்தப்போக்கு நிற்கவில்லை என்றால் maxillary தமனியை பிணைக்க வேண்டும். அடுத்த கட்டமாக இதிலும் நிற்கவில்லை என்றால் external carotid தமனியை பிணைக்க வேண்டும். இறுதியாக anterior மற்றும் posterior ethmoid தமனிகள் பிணைக்கப்படுகிறது. இந்த முயற்சிக்குப் பின்பும் ரத்தப்போக்கு நிற்கவில்லை என்றால் நான்காம் கட்டத்திற்கு செல்லலாம் (08:30). 

இதில் எண்டோவாஸ்குலர் எம்பொலைசேஷன் செய்யப்படுகிறது. முதலில் ஆஞ்சியோகிராபி மூலம் மூக்கின் ரத்த சுழற்சி காணப்படுகிறது. பின்பு எந்த ரத்தின நாளத்தில் இருந்து ரத்தப்போக்கு ஏற்படுகிறது என்று கண்டுபிடித்து விட்டு, அந்த நாளத்திற்குள் கத்தீட்டரை நுழைத்து, பாலிவினைல் ஆல்கஹால் (polyvinyl alcohol) போன்றவற்றை பயன்படுத்தி ரத்த போக்கை நிறுத்தலாம் (09:06).
நாம் ஏற்கனவே பார்த்த osler weber rendu syndrome இல் வழக்கமாக தமனி பிணைத்தல், எம்பொலைசேஷன் போன்றவற்றை செய்யலாம், அதுமட்டுமில்லாமல் புதிதாக செப்டோடெர்மோபிளாஸ்டி அதாவது தோலை கிராஃப்ட் ஆக பயன்படுத்தி மூக்கில் வைக்கப்படுவதால் ரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்படும். அல்லது Young’s அறுவை சிகிச்சை மூலம் நாசி துவாரத்தை முழுமையாக அடைக்கலாம். லேசர் பயன்பாட்டின் மூலம் ரத்தப்போக்கை குறைக்கும் வழியும் வந்து விட்டது (09:33).
முடிவாக நாம் முதலில் முன்வைத்த கேள்வியைப் போல, மூக்கில் ரத்தம் வடிவதை அலட்சியப்படுத்துவது கூடாது. அதைக் கண்டு பதட்டப்படாமல், காலதாமதம் இன்றி முதலுதவி செய்து மருத்துவரை அணுகினால், நிலைமைக்கேற்ப சிகிச்சை முறை பரிந்துரைக்கப்படும். அதன்படி ஆலோசனையை பின்பற்றுவதால் மூக்கில் ரத்தம் வடிதலை கட்டுக்குள் கொண்டு வரலாம்.

.

Add your first comment to this post